கொரோனா நோயாளி மீது வழக்கு

கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்து இரவில் திருட்டுத்தனமாக 'வெளியேறி' பேருந்து நிலையத்தில்' அமர்ந்திருந்த கொரோனா நோயாளி மீது பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-04-29 14:30 GMT

கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதை முன்னிட்டு பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புதுரோட்டில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடத்தில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மையம் ஏப்ரல் 22-ம் தேதி திறக்கப்பட்டது.

தற்போது அங்கு 55 பேர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் அதிராம்பட்டிணம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சாரதிதாசன் (44) என்பவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல் 24-ம் தேதி அவர் சிகிச்சை  மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த  26  சிகிச்சை மையத்தின் பின்பக்க வாயிலில் அடைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை பிரித்து அதன் வழியாக வெளியேறி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில்  நள்ளிரவில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சாரதிதாசனிடம் விசாரணை செய்தனர். அப்போதுதான், அவர் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மையத்திலிருந்து தப்பி வந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

அவரிடம்   போலீஸார் நடத்திய விசாரணையில்  'காத்து வாங்க' வந்ததாக அவர் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர், அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் மீண்டும் கரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த  26-ம் தேதி கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்து வெளியேறி, மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அவரது புகாரின் பேரில், பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் சாரதிதாசன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 270, 271, 188 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 51பி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 

Tags:    

Similar News