ஜாதி சான்றிதழ், மின்சாரம் வழங்க கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு
பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடும்பத்தினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் ஜாதி சான்றிதழ் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வலியுறுத்தி மனு.`
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதி மற்றும் ஆலடிக்குமுளை கிராமப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்துக்கு மேல் இந்த பகுதியில் அவர்கள் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் உள்ளனர்.
இவர்களது குழந்தைகள் படிப்பதற்கு ஜாதி சான்றிதழ் எதுவும் இல்லாததால், எந்தவித அரசு சலுகையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுபற்றி பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று 200க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்தினர்கள் ஒன்று திரண்டு, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவில்லை என்றால் அனைவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.