வங்கி மேலாளர் பெயரில் டீக்கடைக்காரரின் கணக்கில் ரூ.1.24 லட்சம் மோசடி
டீக்கடைக்காரரின் செல்போனுக்கு தொடர்ந்து 3 முறை வந்த ஓ.டி.பி எண்ணை அந்த மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்
வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.24 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் கீழமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் என்று கூறியுள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து பேசிய அந்த நபர், "உங்களுடைய ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது. உங்களுக்கு புதிய ஏ.டி.எம் கார்டு வந்துள்ளது. இதனால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஏ.டி.எம் கார்டு எண்ணை சொல்லுங்கள் என கூறியுள்ளார். அதற்கு, தன்னிடம் ஏ.டி.எம் கார்டு இல்லை என்று டீ கடைக்காரர் கூறியுள்ளார்.
உடனே அந்த மர்ம நபர் உங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்தை படம் எடுத்து அனுப்புங்கள் நாங்கள் ஏ.டி.எம் கார்டை புதுப்பித்து தருகிறோம் என்று கூறியுள்ளார். அதை உண்மையென நம்பிய டீக்கடைக்காரர், தனது வங்கி கணக்கு புத்தகத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதனை சோதனை செய்து பார்த்த அந்த நபர் இதில் பணம் குறைவாக உள்ளதால் ஏ.டி.எம் கார்டை பின்னர் அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும், வேறு வங்கி கணக்கு ஏதும் உள்ளதா என்றும் கேட்டுள்ளார். அதற்கு டீக்கடைக்காரர் தனது தந்தையின் ஏ.டி.எம் கார்டு தகவல்களை தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் உங்களுக்கு ஓ.டி.பி எண் வரும் அதை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.
டீக்கடைக்காரரின் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி எண்ணை தெரிவித்துள்ளார். இதேபோல் தொடர்ந்து 3 முறை வந்த ஓ.டி.பி எண்ணை தெரிவித்துள்ளார். இந்த விவரங்களை எல்லாம் பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து டீக்கடைக்காரரின் செல்போனுக்கு 3 தவணையாக மொத்தம் ரூ. 1.24 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் தன்னிடமிருந்த பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டீக்கடைக்காரர் தன்னிடம் செல்போனில் பேசிய நபர் தான் தன்னை ஏமாற்றி பணத்தை திருடியதை அறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.