காய்கறி, மீன் பெட்டிக்குள் மதுபாட்டில்கள் கடத்தல் -இருவர் கைது
காய்கறி மற்றும் மீன் பெட்டியில் மறைத்து வைத்து, கடத்தி வரப்பட்ட 162 மதுபாட்டில்கள் பறிமுதல். இருவர் கைது -கடலோர காவல் படை போலீசார் நடவடிக்கை.;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் கடலோர பாதுகாப்பு குழும சோதனைச்சாவடியில், அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் திருநாவுக்கரசு, ரவி உள்ளிட்ட போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, தனித்தனியே இரண்டு இருசக்கர வாகனத்தில் காய்கறி மற்றும் மீன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த இருவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், காய்கறி பெட்டிக்குள்ளும், மீன் பெட்டிக்குள்ளும் 162 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது பட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவாரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் திருவாரூர் மாவட்டம் பெத்தவேளான்கோட்டகத்தை சேர்ந்த இளையராஜா மற்றும் நாகை மாவட்டம் கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி திருவாரூர் மற்றும் நாகை பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தாக தெரிவித்துள்ளனர்.