பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக உதவிய ஆட்சியர்
பட்டுக்கோட்டையில் நோயுடன் போராடிய பெண்ணுக்கு, மேல் சிகிச்சை அளிக்க கலெக்டர் உடனடியாக உதவினார். சப்–கலெக்டர், தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மூன்று குழந்தைகளையும் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பாக்கியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உஷா, வயது (40), இவருக்கு பாலா (9), அன்பு (6), என இரு ஆண் குழந்தைகளும், தரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவரது கணவர் வீராசாமி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். வீட்டு வேலை செய்து, மூன்று குழந்தைகளையும் உஷா காப்பாற்றி வந்தார். தொடர்ந்து வறுமையின் காரணமாக உணவு முறையாக எடுத்துக்கொள்ளாத நிலையில், உஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மோசமான நிலையில், மெலிந்த தேகத்துடன், பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்கள் யாரும் வராத நிலையில், மூன்று குழந்தைகளும் கவனிப்பார் இன்றி நிர்கதியாய் நின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உடனடியாக நடவடிக்கை எடுத்தார், பட்டுக்கோட்டை சப்–கலெக்டர் பாலச்சந்தர், தாசில்தார் தரணிகா ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் உஷாவை நேரில் சென்று பார்வையிட்டு, விபரங்களை கேட்டறிந்தனர். அப்போது உஷாவிற்கு, காசநோய், வயிற்று பகுதியில் கட்டி போன்றவை இருப்பதாக அதிகாரிகளிடம் டாக்டர்கள் தெரித்துள்ளனர்.
அதன் பின்னர், உஷாவை மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்த இளைஞர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், குழந்தை நல குழுமம் உறுப்பினர்களுடன் இணைந்து, குழந்தைகளை தஞ்சாவூர் அரசு காப்பகத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். குழந்தைகளை பிரிந்த உஷா கண்ணீர் விட்டு அழ, அங்கிருந்த பலரும் அழுதனர்.