அன்னவாசல் அருகே கல்குவாரியில் வெடி விபத்து ஒருவர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காயம்
புதுக்கோட்டை அருகே, குவாரிக்காக வைத்திருந்த வெடிபொருட்கள் மின்னல் தாக்கியதில் வெடித்ததில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.;
புதுக்கோட்டை அருகே மழைக்காக மக்கள் ஒதுங்கியபோது, குவாரிக்காக கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மின்னல் தாக்கியதில் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கணாமலைப்பட்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான மலையடி கல்குவாரியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கொட்டகையின் ஓரத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மழைக்காக ஒதுங்கி உள்ளனர்.அப்போது அந்தக் கொட்டகையில் மின்னல் தாக்கியதில் உள்ளே கல்குவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் மீது பட்டு வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் தெற்கு களம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(17) சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 10 பேர் அன்னவாசல் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்குவாரியில்அமைக்கப்பட்ட கொட்டகை வெடித்து சிதறியதில் அது முற்றிலும் எரிந்து நாசமானது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இந்த வெடி விபத்தில் வேறு யாரேனும் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.