இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்ற இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்
இன்று தொடங்கி45 நாட்களுக்கு இணைப்பு பாட பயிற்சியினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர்.
செப் 1-ஆம் தேதி (புதன்கிழமை) 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறந்துள்ளன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் 9,10,11,12 -ஆம் வகுப்புகளின் மாணவர்கள் இன்று ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 9, 10 -ஆகிய வகுப்பு மாணவர்கள் இன்று காலையில் ஆர்வமுடன் வந்தனர். முதலில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் மாணவர்கள் வந்ததை ஆசிரியர்கள் சரிபார்த்தனர்.பின்னர் கிருமி நாசினி மற்றும் சோப்பு நீர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அறிவுரையின்படி, பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களை, இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் இனிப்பு வழங்கி வரவேற்றார். பின்னர், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கினர். இன்று தொடங்கி 45 நாட்களுக்கு இணைப்பு பாட பயிற்சியினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர். இந்த நிகழ்வில் இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,பள்ளியின் தலைமையாசிரியர் சொக்கலிங்கம், உதவி தலைமையாசிரியர் பாலச்சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.