பேரூராட்சிக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி தொழிலாளர்கள் மனு

பேரூராட்சிக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவு படுத்தக்கோரி விவசாயத்தொழிலாளர்கள் கீரனூரில் மனுகொடுத்தனர்

Update: 2022-05-12 13:30 GMT

நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்யக்கோரி கீரனூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு மனு கொடுக்கச்சென்ற அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி  விவசாயத்தொழிலாளர்கள் 600-க்கும் மேற்பட்டோர் மனுக்கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

நகரப் பகுதிகளுக்கும் தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு நூறுநாள் வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியும் வருகிறது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக சில பேரூராட்சிகளுக்கு இத்திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 600-க்கும் அதிகமானோர் பேரணியாகச் சென்று, பேரூராட்சி செயல் அலுவலர் கு.சின்னசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

போராட்டத்திற்கு விதொச ஒன்றியத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.பெருமாள் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம், மாவட்டச் செயலாளர் கே.தங்கவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செலவன், பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.

Tags:    

Similar News