தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எடப்பாடி என்று பெயருடன் நான் அழைக்க மாட்டேன், எடப்பாடி என்ற பெயருடன் தமிழக முதல்வரை அழைப்பதால் அந்த பகுதி மக்கள் அவமானமாக உள்ளது என்று கூறியதையடுத்து இனி முதலமைச்சர் பழனிசாமி என்று தான் அழைப்பேன் என விராலிமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, எடப்பாடி என்று பெயரை சொன்னால் அந்த ஊருக்கே அவமானம் என்று அந்த பகுதி மக்கள் கூறியதால் இனி நானும் திமுகவில் உள்ளவர்களும் முதலமைச்சர் பழனிசாமி என்று தான் கூற வேண்டும், எடப்பாடி என்ற பெயரை முதல்வர் பெயருடன் பயன்படுத்த வேண்டாம் என்று எடப்பாடி பகுதியினர் கூறியுள்ளனர். உள்ளாட்சிதுறை ஊழலாட்சிதுறையாக மாறிவிட்டது.
கொரோனா காலத்திலும் ஊழல் செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது, தற்போது உள்ள ஆட்சியில் சிலிண்டர் விலை முதல் மளிகை பொருட்களின் விலை வரை அனைத்தும் உயர்ந்துள்ளது, அம்மா ஆட்சி நடத்துகிறோம் என்று கூறுபவர்களால் ஜெயலலிதா மரணத்தையே கண்டுபிடிக்க முடியவில்லை, திமுக ஆட்சி வந்தவுடன் எந்த வேலை நடந்தாலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி குற்றம் செய்யப்பட்டவர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.