திருமயம் தொகுதியில் கிராம சபைக்கூட்டங்கள்: சட்ட அமைச்சர் ரகுபதி பங்கேற்பு
கிராமப்புற மக்களின் கோரிக்கைக்கு ஏற்பட அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தகவல்;
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திருமயம் ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி மற்றும் அரிமளம் ஒன்றியம், இராயவரம் ஆகிய ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (01.05.2022) கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது; புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், இராயவரம் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
லெம்பலக்குடி ஊராட்சியில் 2021-2022 ஆண்டு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூ.6,00,000 மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.55,34,847 மதிப்பீட்டிலும், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6,00,000 மதிப்பீட்டிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.3,54,34,170 மதிப்பீட்டிலும், 75 % குவாரி சீனியரேஜ் நிதியிலி ருந்து ரூ.71,06,000 மதிப்பீட்டிலும், மனைப்பிரிவு வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.5,20,000 மதிப்பீட்டிலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத் தின் கீழ் ரூ.18,34,900 மதிப்பீட்டிலும்.
14 -ஆவது நிதிக்குழு மான்ய திட்டத்தின்கீழ் ரூ.38,34,600 மதிப்பீட்டிலும், 15வது நிதிக்குழு மான்ய (கிராம ஊராட்சி) திட்டத்தின்கீழ் ரூ.20,73,400 மதிப்பீட்டிலும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்ட 62 பயனாளிகளும் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளை கிராமப்புற பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப இயக்கிட அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பெண்கள் நகர்ப்புற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து தங்களது வேலைகளுக்கு சென்றுவர முடிகிறது.தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் வழங்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள போடி கண்மாய், துவரக் கண்மாய் சீரமைப்பதற்கும் மற்றும் புதிதாக சமூதாயக் கூடம் கட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காகவும், மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கும் இலவச வண்டல் மண், களிமண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.எனவே கிராமங்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அழகு (எ) சிதம்பரம், ரேகா கிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் பாலு, கலைச்செல்வி மீனா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.