தடுப்பூசி மட்டுமே நம்மை காப்பாற்றக்கூடிய ஆயுதம்: அமைச்சர் ரகுபதி
தடுப்பூசி மட்டுமே நம்மை காப்பாற்றக்கூடிய ஆயுதம் தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.;
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 1 லட்சம் மதிப்பிலான கொரோனா அவசரகால மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மருத்துவ இணை இயக்குனர் கலைவாணி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா அவசரகால மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவர்களிடம் வழங்கிய பின் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது :
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எங்களை எதிர்த்து போராட வேண்டியதில்லை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தப்படும் என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிச்சயமாக நிறைவேற்றித் தருவார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அரிமளம் பகுதியில் இதுவரை 20 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மீதி 80 சதவீதம் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நம்மை காப்பாற்றக்கூடிய ஆயுதம் தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது. மாணவர்களின் பெற்றோர்கள் வரும்போது அவர்களிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடியது ஆசிரியர்களான உங்களின் பொறுப்பு. டெல்டா வைரஸ் வந்தாலும் சரி மற்ற எந்த வைரஸ் வந்தாலும் சரி அனைத்தையும் சந்தித்து மக்களை காப்பாற்றக்கூடியது அரசின் கடமை என்ற உணர்வோடு இருக்கக்கூடிய ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று பேசினார்.