இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாம்களில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தாலாசரஸ், ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்
புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் குறித்த செய்தியாளர் பயணம் நடைபெற்றது.
இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம் என்பது இலங்கையில், இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்க ளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த ஈழப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல் களால் நிராதரவான இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசால் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டனர்.
இப்பயணத்தின் போது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.291.30 இலட்சம் மதிப்பீட்டில் 56 நான்கு வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளும் மற்றும் 2 தனி வீடுகளும் என ஆகமொத்தம் 58 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் ஒவ்வொரு வீடுகளும் தலா 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வீடுகளில் பொதுமக்களுக்குத் தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகளை உயர் தரத்துடன் விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வசிப்பதற்கு தற்காலிக வசிப்பிடங்கள் அமைக்கவும், இவ்விடத்தில் பொதுமக்களுக்குத் தேவையான கழிப்பறைவசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் நபர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்காக செய்துவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர்ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி செயற்பொறியாளர் கலைவாணி, வட்டாட்சியர் பிரவினாமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவள்ளி, வெங்கடேஷ், உதவிப் பொறியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.