புதுக்கோட்டையில் ஆடு திருடும் கும்பலை கைது செய்த காவல் துறையினர்
காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் ஆடு திருடும் கும்பலை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
புதுக்கோட்டையில் ஆடு திருடும் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்
திருச்சி காவல் ஆய்வாளர் ஆடு திருடும் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதனையடுத்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஆடு திருடும் திருடர்கள் வளைத்துப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி ,திருமயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து ஆடு திருடர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்களிடம் ஆடுகளை ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் ஆடு திருடும் திருடர்களை கண்காணிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதில், புதுக்கோட்டைமச்சுவாடி கொட்டகைகார தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ரஞ்சித், போஸ் நகர் 10 வீதியை சேர்ந்த குமார் மகன் கோபி, அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த முஹம்மது ஹக்கீம் மகன் அபுபக்கர், காந்தி நகரை சேர்ந்த ராஜன் மகன் சஞ்சய், காமராஜா புரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் புஷ்பராஜ், ஆகியோரிடமிருந்து 42 ஆடுகளையும் ஆடுகளை திருட பயன்படுத்திய, ஒரு மினி வேனையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலை தீவிரமாகக் கண்காணித்து அவர்களை பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.