திருமயம் தொகுதியில் பயன்பாட்டுக்கு வந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகள்
பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.02 கோடி செலவில் 11 முடிவுற்ற பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (27.11.2022) திறந்து வைத்தார்.
அதன்படி, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில், செவலூர் ஊராட்சி மலையடிப்பட்டி கிராமத்தில் ரூ.10.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக்கடையும், கோவனூர் சமுதாயக்கூடம் அருகில் ரூ.6 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு உண்ணும் கூடத்தினையும், கொன்னைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.96 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறையுடன் கூடிய வைப்பறையும்,
திருக்களம்பூர் திருமண மண்டபத்திற்கு ரூ.9.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருக்களம்பூர் கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.9.90 இலட்சம் செலவிலும் மற்றும் ரூ.9.85 இலட்சம் செலவிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், பகவாண்டிப்பட்டி ஊராட்சி காயாம்புஞ்சை கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.11 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும்,
ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.9.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரும், மறவாமதுரை ஊராட்சி சிவன்கோவில் ஊரணிக்கு ரூ.20 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரும், காரையூர் ஊராட்சி, காரையூர் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையும் மற்றும் அரசமலை ஊராட்சி, மொங்காம்பட்டி கிராமத்தில் ரூ.6 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் என ஆகமொத்தம் ரூ.1.02 கோடி செலவில், 11 முடிவுற்றப் பணிகளை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொன்னமராவதி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், திருக்களம்பூர் ஊராட்சியில் ரூ.5.50 கோடி மதிப்பிலான 2 சாலைப் பணிகளும், கோவனூர் ஊராட்சியில் ரூ.4.27 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும், செவலூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி பகுதிநேர நியாயவிலைக்கடையின் மூலம் 145 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்த்து எளிதான முறையில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.எனவே கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, புதுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், வட்டாட்சியர் பிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.