திருமயம் தொகுதியில் அரசின் மருத்துவ முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப் பட்டுள்ளது;
புதுக்கோட்டை மாவட்டம்,அரிமளம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் தொடக்கி வைத்து, கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டில் ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8வது மருத்துவ முகாம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப் பட்டுள்ளது.
இம்முகாமில், மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இம்மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையி லேயே நோய்கள் கண்டறியப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் அளித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களுக்காக நடத்தப்படும் இந்த ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை அனைத்து பொதுமக்களும் உரிய முறையில் பயன்படுத்தி, நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
தொடர்ந்து, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் மருத்துவ பெட்டகங் களையும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து உபகரணங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), வட்டாட்சியர் புவியரசன், கடியாப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பழனிவேல்ராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.