அறநிலையத்துறை நிலத்தில் மயானப்பாதை : போலீஸ் பாதுகாப்புடன் நிலம் மீட்பு

திருமயம் அருகே அறநிலையத்துறை நிலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் மீட்டனர்;

Update: 2023-11-30 10:00 GMT

 சீராத்தக்குடி கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று இடத்தை அளவீடு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திருமயம் அருகே அறநிலையத்துறை நிலத்தை  பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  வருவாய்த்துறையினர் மீட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நெய்வாசல் ஊராட்சிக்குட்பட்ட சீராத்தக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச்சொந்தமான இடத்தை அந்த ஊர் மயானத்துக்கு செல்லும் பாதையாகப் பயன்படுத்தி வந்த விவகாரத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்தப்பகுதியை அளவீடு செய்யும் நடவடிக்கையை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சீராத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்த சடலத்தை கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் அந்த பாதை கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் அந்த இடம் கோயில் நிர்வாகிகள் பெயரில் உள்ளது என்று கூறி அந்த மயான பாதையை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கோயில் நிர்வாகிகள் முள்வேலி அமைத்தனர்.

இந்நிலையில் கடந்த 26.10.2023 -ஆம் தேதி சீராத்தக்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பையா (85) என்பவர் உடல்நல குறைவால் இறந்தார். வழக்கமாக மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் கம்பி வேலி போடப்பட்டிருந்ததால் சடலத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கமாக பயன்படுத்தப்படும் பாதையில் தான் சடலத்தை கொண்டு செல்வோம் என்று இறந்தவரின் உறவினர்கள் கூறிய நிலையில், கோயிலுக்கு சொந்தமான‌ இடத்தின் வழியே சடலத்தை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவறிந்த பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். திருமயம் வட்டாட்சியர் புவியரசன் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் சம்பந்கப்பட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அதன் முடிவில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் வேலி அகற்றப்பட்டு சடலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது‌. எனினும் தொடர்ந்து இந்த பாதை பிரச்னை நீடிக்கக்கூடிய சூழல் உள்ளதால், சீரத்தாக்குடி பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு நிரந்தரமாக ஒரு வழியை வருவாய்த்துறையினர் ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சீராத்தக்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட சங்கிலிகருப்பர் கோயில் பூசாரிக்கு 1806 -ஆம் வருடம் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வழங்கப்பட்ட பூஜை மானிய புஞ்சை விவசாய நிலத்தில் யாரும் சாலை அமைக்கவோ இறந்தவர் உடலை எடுத்துச்செல்லவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோயில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்..

இந்நிலையில், அந்த இடத்தை அளவீடு செய்து இடத்தை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரில், வருவாய்த்துறையினரும் அறநிலையத்துறையினரும் சீராத்தக்குடி கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று இடத்தை அளவீடு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதுகாப்புக்காக 50 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் திருமயம் ஆய்வாளர் குணசேகரன், கே.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,பொன்னமராவதி காவல் ஆய்வாளர் ரமேஷ்,திருமயம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பாரதி, அறநிலையத்துறை வட்டாட்சியர் வனிதா, அறநிலையத்துறை  நிர்வாக அலுவலர்  முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News