கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி: தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்பு
பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புதுறையினர் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உலகம்பட்டியில் அழகு என்பவர் அங்குள்ள வயல்வெளியில் தனது பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று வயல் பகுதியில் கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் பால் எடுப்பதற்காக திரும்பி வந்து மாட்டினை அவிழ்க்கும்போது அங்கிருந்த கன்றுக்குட்டியை காணவில்லை. பின்னர், அந்தப் பகுதி முழுவதும் தேடி பார்த்தபோது அருகிலிருந்த கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து கிடந்தது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.
கன்று குட்டியை மீட்ட பொன்னமராவதி தீயணைப்புத் துறை வீரர்களுக்கு கன்றுக்குட்டியின் உரிமையாளர் அழகு தனது நன்றியை தெரிவித்தார்.