புதுக்கோட்டை அருகே வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்;
புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் சட்ட அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாம் புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களுக்கும் உயர் தரத்திலான சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலமாக மருத்துவ சேவை தேவைப்படும் நபர்களின் வீட்டிற்கே அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,05,471 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட 'வரும் முன் காப்போம்' திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, 'கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்' என்ற பெயரில் புத்துயிர் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காக, வரும் முன் காப்போம் திட்டம், கடந்த திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரப்படவில்லை. எளிய மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில், வருமுன் காப்போம் என்ற திட்டத்தை 2006-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பரிசோதனையின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோய்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை வழங்கி பொதுமக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அத்திட்டம் 'கலைஞரின் வருமுன் காப்போம்' என்ற பெயரில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு, 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. அதாவது ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் என, 385 வட்டாரங்கள் மற்றும் 20 மாநகராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்னை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக பரிந்துரைக்கப்படும்.
திருமயத்தில் 10 டயாலிசிஸ் கருவிகள் கொண்ட இரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு ஏழை, எளிய பொதுமக்க ளுக்கு உயர்தரத்திலான மருத்துவ சேவைகள் வழங்குவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்களை முறையாக பயன் படுத்திக்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.இராம்கணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம், திருமயம் வட்டாட்சியர் பிரவினாமேரி, ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.