ரூ 5 -க்கு 18 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: அசத்தும் திருமயம் ஊராட்சி !

Update: 2023-11-29 15:30 GMT

புதுக்கோட்டை அருகே திருமயம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் மலிவு விலையில் தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம் மூலம் 5 ரூபாய்க்கு 18 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களை அசத்தி வருகிறது.

திருமயம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இவற்றில் பொதுமக்கள் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றறனர். அவர்களில் சுமார் 7,500 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியின் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.எனினும், பொதுமக்கள் தங்களது குடிநீர்த் தேவைக்காக வெளிச்சந்தையில் (மினரல் வாட்டர்) சுத்திகரிக்கப்பட்ட நீரை 20 லிட்டர் கேன், ரூ. 30 முதல் 35 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இதையறிந்த ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலாம் என யோசனை செய்து, அதை செயலாக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, திருமயம் பேருந்து நிலையத்தில் பயனற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு சீரமைக்கப்பட்டது. இந்தக் கிணற்றின் நீரின் உவர்ப்பு, கார அமிலத்தன்மைகள் குறித்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி அந்தத் தண்ணீரை குடிநீருக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்தக் கிணற்றின் அருகில், சுமார் ரூ. 10 லட்சம் செலவில் 1 மணி நேரத்துக்கு சுமார் 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட கருவி அமைக்கப்பட்டது.மேலும், அந்த சுத்திகரிப்பு நிலையத்தின் வெளிப்புறத்தில் எடை பார்க்கும் கருவியைப் போன்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில், 5 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் குழாயிலிருந்து 18 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறமுடியும்.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை திருமயம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி கடந்த ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக் குத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து திருமயம் ஊராட்சித்தலைவர் எம். சிக்கந்தர் கூறியது: பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிச் சந்தையில் விற்பனையாகும் மினரல் வாட்டர் கேன்களை வாங்கி குடிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். மினரல் வாட்டர் பயன்பாடு என்பது எளிய நடுத்தர மக்களிடமும் அதிகரித்து விட்டது. இந்நிலையில், சுத்தமான குடிநீருக்காக மாதந்தோறும் ரூ.900 முதல் 1000 வரை செலவழிக்கின்றனர்.

இந்தச் செலவு சுமையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டத்தை ஊராட்சி நிர்வாகம் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுத்தி வருகிறது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் இந்த நிலையத்தில், தினமும் சராசரியாக 100 பேர் வந்து, ரூ. 5 -க்கு 18 லிட்டர் குடிநீரை திருப்தியுடன் எடுத்துச் செல்கின்றனர் என்றார் அவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு இத்திட்டம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

Tags:    

Similar News