சொத்துவரி உயர்வை மறு சீராய்வு செய்ய புதுக்கோட்டை நகராட்சி முடிவு

சொத்துவரிக்கு மறு சீராய்வு செய்ய நகராட்சி எடுத்துள்ள முடிவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என சிபிஎம் கூறியுள்ளது

Update: 2023-04-07 12:45 GMT

பைல் படம்

உயர்வு செய்யப்பட்ட வரி விதிப்புகளை மறு சீராய்வு செய்ய புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தெரிவித்துள்ளது: புதுக்கோட்டை நகராட்சியில் எந்தவித வரைமுறைகளுக்கும் உட்படுத்தாமல் கடந்த ஆண்டைவிட பல மடங்கு சொத்துவரியை உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எங்கள் கட்சி அலுவலகத்திற்கும் வந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார். எங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

உதாரணத்திற்கு கடந்த ஆண்டு பெரியார் நகர் பிளாட் எண்:1059-ல் ரூ.3538-ஆக இருந்த குடியிருப்பு வரி இந்த ஆண்டு ரூ.19,076 ஆகவும், கணே~;நகர் 4-ஆம் வீதியில் ஒரு வீட்டிற்கு ரூ.2092-ஆக இருந்த வீட்டு வரி ரூ.8,222-ஆகவும், என்ஜிஓ காலனியில் பிளாட் எண்: 46-ல் ரூ.2,300-ஆக இருந்த குடியிருப்பு வரி ரூ,19,840 உயர்த்தப்பட்டது. இதேபோல நகராட்சி முழுவதும் பல்வேறு விதமான சொத்துவரிகளும் உயர்த்தப்பட்ட கண்டுபிடிக்கப்பட்டது.

குடியிருப்பு பகுதியின் தன்மையின் அடிப்படையில் பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பு கடந்த ஆண்டுவரை 6 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வரிக்கான நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் இரண்டு வகைகளாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியின் அமைவிடம், அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு இது வகைப்படுத்தப்படவில்லை. இதனால், மிகவும் பின்தங்கிய பகுதி மக்களும் அளவுக்கு அதிகமான வரிகளைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வரிவசூல் பணியிலும் மிகப்பெரிய அளவில் குறைபாடு உள்ளதாகத் தெரிய வருகிறது. கடந்த 2021-2022-ஆம் நிதியாண்டிற்கு வசூலிக்க வேண்டிய ரூ.1144.59 லட்சத்தில் ரூ.702.23 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. 2020-2021-ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்துவரியில் 59 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இது வரி வசூல் பணியில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும், பொறுப்பின்மையையும் காட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துவரி மதிப்பீடு வெளிப்படையாகவும், வரி மதிப்பீடு செய்யும் அலுவலர்கள் ஊழல் நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டும், புதிய கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு குறித்த வழிமுறைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக வெளியிடுமாறு வழிகாட்டியுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகமோ எந்தவித வரையரைகளுக்கும் உட்படுத்தமாமல் தான்தோன்றித் தனமாக வரிவிதிப்பில் ஈடுபட்டுள்ளது எங்களது கள ஆய்வில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து எங்கள் கட்சியின் சார்பில் இத்தகைய மோசடிகளை அம்பலப்படுத்தி நகர்முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம், நகராட்சி அலுவலகம் முற்றுகை என பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பரிவிற்கும் புகார் மனு அளித்துள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலர் நாகராஜன் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பனிர் ஜி.நாகராஜன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், நகரக்குழு உறுப்பினர்கள் கி.ஜெயபாலன், எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சு வார்த்தையில், 2022-23-ஆம் ஆண்டு சொத்துவரி பொதுச்சீராய்வு செய்யப்பட்டதில் குறிப்பிட்ட கணக்கீட்டைவிட உயர்வு செய்யப்பட்ட வரி விதிப்புகளைக் கணக்கெடுத்து அவ்வரி விதிப்புகளுக்கு மறு சீராய்வு செய்து உரிய வரி விதிப்பு விகிதத்தில் வரி விதிப்பு செய்ய நகர்மன்றத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட தீர்மானத்தினை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசின் அனுமதி பெற்று வரி உயர்விற்கான பணிகள் முடிவடையும் வரை உயர்வு செய்யப்பட்ட வரித் தொகையை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க கோரப்பட்டது குறித்து நடவடிக்கை மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு சோலையப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News