காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது

செப்டம்பர் 1-ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Update: 2022-08-24 14:00 GMT

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்; தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றினார். கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் மீத்தேன், நீல்கேஸ், டைட் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஏற்கெனவே ஒன்றிய பிஜேபி அரசு முடிவெடுத்து, இத்திட்டங்களை செயல்படுத்த சர்வதேச ஒப்பந்தங்களைக் கோரி பல்வேறு கார்பரேட் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் செய்தது. இத்திட்டங்கள் காவேரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தினால் முப்போகம் விளையக்கூடிய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இப்பகுதி முழுவதும் விவசாயத்திற்கு லாயக்கற்ற பகுதியாக மாற்றப்பட்டு பாலைவனமாக மாறிவிடும் என்ற ஆய்வுகளின் அடிப்படையில், மேற்கண்ட திட்டங்களை காவேரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன் முயற்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படக்கூடிய அனைத்து விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இதர பல்வேறு அமைப்புகளை இணைத்து காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இப்போராட்டங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்ததோடு, இந்த அமைப்பு நடத்திய போராட்டங்களிலும் பங்கேற்றனர். போராட்டம் தீவிரமடைந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் உரிய தலையீடு செய்த நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

இதன்மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்தவொரு புதிய இயற்கை எரிவாயு உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. மேலும், ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி முலம் செயல்பட்டு வரும் கச்சா எண்ணை எடுப்பது, சுத்திகரிப்பது மட்டும் நடைபெறலாம்.

மூடப்பட்ட கிணறுகளையோ, புதிய கிணறுகளையோ ஓஎன்ஜிசி உட்பட செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓஎன்ஜிசி-யால் ஏற்கெனவே மூடப்பட்ட 40 கிணறுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு சட்டத்திற்குப் புறம்பாக பல முயற்சிகளை ஓஎன்ஜிசி செய்து வருகிறது. ஓஎன்ஜிசி-யின் இந்த செயல்களுக்கு ஆதரவாகவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற நிலையில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய செயல் திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த நிறுவனமும் இதுபோன்ற இயற்கை எரிவாயு திட்டங்களை செயல்படுத்த அரசு அனுமதிக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால் ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News