மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் விடிய விடிய திருத்தேர் விழா
மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் விடிய விடிய திருத்தேர் விழா நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறவில்லை.
தற்போது அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் கடந்த திங்கட்கிழமை இந்த ஆலயத்தின் திருவிழா திருச்சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன்பின் நேற்று மாலை 6 மணிக்கு புனித செபஸ்தியாரின் திரு உருவம் தாங்கிய கொடி ஊர்வலம் வந்த பின்பு மீண்டும் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் நள்ளிரவு 12 மணியளவில் ஏழு திருத்தேர் அந்த ஆலயத்தை சுற்றி உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.
முக்கிய வீதியான பழைய செபஸ்தியார் கோவில் தெரு அந்தோணியார் கோவில் தெரு வழியாக விடிய விடிய தேர் பவனி விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த தேர் பவனி விழாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஜாதி மத சமூக பாகுபாடுகளைக் கடந்து தேரை வலம் பிடித்து இழுத்துச் சென்று புனித செபஸ்தியாரே வழிபட்டனர்.
மேலும் இத்திருத்தலத்தில் உலக நன்மைக்காகவும் நல்ல மழை வேண்டி விவசாயம் செழிக்கவும் கூட்டு வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் 100 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.