விவசாயிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் திருட்டு: போலீஸார் விசாரணை
வங்கியிலிருந்து வேளாண்துறை அதிகாரி பேசுவதாகக்கூறி மர்ம நபர் வங்கி கணக்கை புதுப்பிக்க வங்கி எண் ஓடிபி எண்ணை கேட்டுள்ளார்;
விவசாயிடம் நூதன முறையில் இரண்டு லட்சத்தி தொண்ணூற்று ஏழாயிரம் ரூபாயயை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அறியானிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவர் கந்தர்வகோட்டை அருகே புது நகரில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து கடந்த பத்தாண்டுகளுக்கும் வரவு செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விவசாயி ராஜேந்திரனிடம் யாரோ ஒரு மர்ம நபர் இந்தியன் வங்கியிலிருந்து வேளாண்துறை அதிகாரி பேசுவதாகவும், வங்கி கணக்கை புதுப்பிக்க வங்கி எண் மற்றும் ஓடிபி எண் வேண்டும் என்று கூறி அதனை கேட்டு பெற்று ராஜேந்திரன் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச்சென்றனர். பின்னர் வங்கிக்குச்சென்ற விவசாயி ராஜேந்திரனனுக்கு தனது கணக்கிலிருந்து பணம் காணாமல் போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வங்கிகள் மூலமும் மற்றும் காவல்துறை மூலமும் பொது மக்களிடம் தங்களுடைய வங்கி கணக்கு எண், ஓடிபி எண்ணை போனில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், விவசாயிடம் நூதன முறையில் ஏமாற்றி 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.