வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
குன்றாண்டார்கோவில் வட்டார வள மையத்தில் 25 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 47 உபகரணங்களை சிஆஓ வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டார வள மையத்தில் 25 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 47 உபகரணங்களை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியை முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி பார்வையிட்டார் அப்போது, பள்ளி வளாகத்தூய்மை, கழிப்பறைத்தூய்மை, வகுப்பறைத்தூய்மை, மாணவர்களுக்கான இருக்கைகள் தூய்மை, உடல் வெப்ப பரிசோதனை கருவி மற்றும் ஆக்ஸிமீட்டர் செயல்பாடு, சானிடைசர் அல்லது சோப்புநீர் கொண்டு மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பள்ளி வளாகத்தில் உள்ள அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர்களுக்கு கற்பித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
குறிப்பாக, ஆசிரியர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து வைத்துக் கொண்டு மாணவர்களை பின்பற்றுவது பற்றியும், அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச பாடத்திட்டம், புத்தாக்க பயிற்சி கட்டகம் கொண்டு, ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் ஒரு வகுப்பறையில் அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத, அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம், இனி வரும் காலங்களில், அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் சரிவர பின்பற்றாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.ஆய்வின்போது தலைமையாசிரியர்கள் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, குன்றாண்டார்கோவில் வட்டார வள மையத்தில் 25 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 47 உபகரணங்களை வழங்கினார்.இந்த நிகழ்வில், இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர்(தொடக்க நிலை) ரவிச்சந்திரன்,வட்டாரக்கல்வி அலுவலர் துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, ரெகுநாததுரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.