மாத்தூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் வரவேற்பு
மாத்தூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் கை கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன், மாத்தூர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாத்தூர் காவல்நிலையத்தில் தனியார் பள்ளி சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு காவல் நிலையம் மற்றும் காவலர்களின் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
காவல் நிலையமும் மற்ற அரசு அலுவலகங்கள் போல்தான். அதில் பணியாற்றும் அலுவலர்களும் நம் சகோதரர்கள் தான். பயம் இல்லாமல் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்கிற நோக்கில் மாணவர்களை காவலர்களுடன் கலந்துரையாட செய்து காவல் நிலையத்தை பற்றி அறிந்துகொள்ள கள பயணமாக பள்ளி, மாணவ மாணவியர்கள் மாத்தூர் காவல் நிலையம் சென்றனர்.
அங்கு மாணவர்கள் சென்றதும் போலீசார் காவல் நிலையத்தின் வாசலில் நின்று மாணவர்களுக்கு கை கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
மாணவர்கள் உள்ளே சென்றதும் காவலர்கள் உங்கள் நண்பன். எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்படி காவலர்களை பார்க்குமோ அப்படித்தான் நீங்களும் எங்களை உங்கள் சகோதரர்கள் போல் பார்க்க வேண்டும் என்று அன்புடன் பேசி மாணவர்களின் பயத்தை போக்கினர்.
பின்னர் அவர்களுக்கு காவல்துறையினரின் செயல்பாடுகள் அலுவல் முறைகள் மற்றும் பதவி நிலைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விளக்கிக் கூறப்பட்டது.