குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த எம்எல்ஏ: நன்றி தெரிவித்த பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பட்டத்திக்காடு ஊராட்சி பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையை எம்எல்ஏ முத்துராஜா தீர்த்து வைத்துள்ளார்.;
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பட்டத்திக்காடு ஊராட்சி மயிலாடி தெரு பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தீர்த்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பட்டத்திக்காடு ஊராட்சி மயிலாடி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடகாலமாக குடிநீர் தொட்டி இருந்தும் செயல்பாட்டில் இல்லாத காரணத்தால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதியின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதி பொதுமக்களுடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவை சந்தித்து கோரிக்கை வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா மயிலாடி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு குடிநீர் வசதியின்றி தவிக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதனடிப்படையில் நேற்று பட்டத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பா தலைமையில் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சூர்யா செந்தில் அப்பகுதி வார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம், வியாகுல மேரி, அண்ணாதுரை, சாட்சாயினி சத்யா அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சுவாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி, பால் ஊற்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
பட்டத்தி காடு பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனையை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்த்து வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜாவுக்கும் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரைக்கும் பட்டத்திகாடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பா துணைத் தலைவர் சூர்யா செந்தில் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் நன்றியை தெரிவித்தனர்.