புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
பயிர்கள், கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளவும் மீட்புப் பணிகளில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்;
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் சட்ட த்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் கறம்பக்குடி.வட்டம், அதிரான்விடுதி கிராமத்தில் அரசர்குளம் மற்றும் புதுமாவடிக்குளம் கனமழையால் மழைநீர் நிரம்பி வெளியே செல்வது பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதேபோன்று வெள்ளாளவிடுதி, தெக்கிபெரமிக்குளம் மழையால் நிரம்பி வரத்து வாய்க்கால் வழியாக நீர் வெளியேறுவதையும், திருமணஞ்சேரி அக்னி ஆறு தரைப்பாலத்தில் நீர் நிரம்பி செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் தொடர்ந்து செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையால் நிரம்பியுள்ள நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து கரைகளை பலப்படுத்தவும், நீர் இருப்பை தொடர்ந்து கண்காணிக்கவும் விவசாயிகள் தங்களது பயிர்கள் மற்றும் கால்நடைக ளுக்கு விரைவில் காப்பீடு செய்து கொள்ளவும், மீட்புப் பணிகளில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக பணியாற்றவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர் உமாசங்கர், வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் தவ.பாஞ்சாலன், பார்வதி பன்னீர்செல்வம், சிவகாமி ராஜமாணிக்கம், முருகேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.