கீரனூர் அருகே பைக் மோதி விபத்து; பாதயாத்திரை சென்ற 4 பேர் பலத்த காயம்
கீரனூர் அருகில் பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.;
ஆடி மாதம் என்பதால் புதுக்கோட்டை, திருமயம்,காரைக்குடி உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சமயபுரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை கிழவிழக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று இரவு 9.30 மணி அளவில் நெடுஞ்சேரி பொன்மாரி கல்லூரி அருகில் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கீரனூர் பழைய கல்லுக்கடை தெருவை சேர்ந்த செல்லையா மகன் கார்த்திகேயன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்த கீழவிழக்குடி பகுதியை சேர்ந்த ரேணுகா, பிரியா, சரசு, காயத்ரி இவர்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனை அடுத்து, அருகில் பாதை யாத்திரை சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்து குறித்து ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.