கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்

Update: 2021-12-25 05:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

 கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர்  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  பேசியதாவது: தமிழக முதல்வர் கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்.தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக கிராமங்கள் தோறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

அந்த வகையில் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  மேலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளும், வருவாய்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஏற்கனவே நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதேபோன்று தற்பொழுது தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசின் பங்குத் தொகை இரண்டு மடங்கும், பொது மக்கள் பங்குத் தொகை ஒரு மடங்கு செலுத்தி பொதுமக்களின் கோரிக்கைகேற்ப வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்ற வழிவகை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் முழுவதுமாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே. செல்லபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், வெள்ளாளவிடுதி ஊராட்சிமன்றத் தலைவர் பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News