நெல் கொள்முதல் நிலையம் கேட்டு போராடிய விவசாயிகள் மீது போலீசார் வழக்கு

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை.

Update: 2021-10-12 06:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள குரும்பிவயல் கிராமத்தில்,  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பனையாவயல், அரங்குளமஞ்சுவயல், திருமுருகபட்டினம், மஞ்சிகாடு, ஈச்சன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் 99 ஹெக்டர் நெல் சாகுபடி செய்து கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு குரும்பிவயலில் செயல்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையம் தற்போது வரை செயல்படாமல் உள்ளதால் அங்குள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் குவியல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டு மழையில் நனைந்து, வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து, கரம்பகுடி - புதுக்கோட்டை செல்லும் சாலையில் நான்கு மணி நேரமாக, நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்; மற்றொருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததால், பரபரப்பு நிலவியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் அபிநயா பேச்சுவார்த்தை நடத்தி, நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

இந்நிலையில், நேரடி நெல்கொள்முதல்  திறக்கக்கோரி,  நேற்று கறம்பக்குடியில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது,  காவல்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News