10 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை தேடும் பணியில் அதிகாரிகள்
சிறையில் உள்ள காளிமுத்து, தான்தான் வேலுச்சாமியை கொன்று புதைத்தாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.;
ஆவுடையார்கோயில் அருகே வடபாத்தி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவரை கொலை செய்து புதைக்கப்பட்டதாக தெரிவித்த தகவலின் பேரில் போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோயில் அருகே குமுளுர் கிராமத்தை சேர்ந்தவர காளிமுத்து(45) இவர் மீது பல கொலை வழக்கு உள்ளது தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரை காணவில்லை என்ற புகார், தேவகோட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள காளிமுத்து, தான்தான் வேலுச்சாமியை கொன்று புதைத்தாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ், தேவகோட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், தாசில்தார் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலையில், வடபாத்தி கிராம ஏரி பகுதியில் வேலுச்சாமியை கொலை செய்து புதைக்கப்பட்டதாக காளிமுத்து காண்பித்த இடங்களில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தோண்டி பார்த்த போது எவ்வித தடயமும் கிடைக்கவில்லை . நாளை மீண்டும் பல இடங்களில் தேடுவதாக கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.