பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணிகள்: அமைச்சர்கள் தொடக்கம்

தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றை யும் வெளிக்கொணரும் வகையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்;

Update: 2023-05-20 07:15 GMT

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை  நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற,  தொல்லியல் அகழாய்வுப் பணியினை, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று (20.05.2023) தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழர்களின் தொன்மையையும், அவர்களின் வரலாற்றையும் வெளிக்கொணரும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டம், வேப்பங்குடி ஊராட்சியில் தொல்லியல் சார்ந்த இடமான பொற்பனைக் கோட்டை கிராமத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள  தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வரலாற்று சிறப்புமிக்க கோட்டையானது 17.75.66 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 1.26 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதியும் அமைந்துள்ளது. இவ்வாழ்விடப்பகுதியின் காலமானது இரும்பு காலத்தில் தொடங்கி பிற்காலம் வரை தொடர்கிறது. இப்பகுதியில் இருந்து இரும்புக்கால ஈமச்சின்னங்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வரலாற்றுக்கு முந்தைய செங்கற்கள் கண்டறியப்பட்டன. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021ம் ஆண்டு முனைவர் இனியன் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் தமிழி எழுத்து பொறிப்புகளைக்கொண்ட பானை ஓடுகள், சதுரங்க ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், எலும்பு ஆயுதங்கள் மற்றும் வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.

தமிழி எழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீரக்கல் ஒன்று கண்டறியப்பட்டது. இந்த வீரக்கல் கணங்குமரன் என்பவருக்காக எடுக்கப்பட்டதாகும். பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவனூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் பூசலில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்டதாகும். கொங்கு என்ற வார்த்தையானது பொதுவாக கொங்கு நாட்டினை குறிப்பதாக கருதுவர். அச்சொல் கல்வெட்டுகளில் பயின்று வருவது இதுவே முதல் முறையாகும்.

சிதிலமடைந்த நிலையில் இருக்கும் கோட்டையின் காலமானது 13-14ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். பொற்பனைக்கோட்டையின் பெயரானது பொன்பரப்பினான் என்ற அடை மொழியினை கொண்ட பாண அரச குலத்தை சார்ந்த குறுநில மன்னனால் கட்டியிருக்கக்கூடும் என்றும், பொற்பனை அல்லது பொன்பனை என்ற கிராமத்தின் பெயருடன் கோட்டை என்ற சொல் இணைந்து பொற்பனைக்கோட்டை என அழைக்கப்படலாயிற்று என்ற இரு கருத்துகள் காணப்படுகின்றன.

கோட்டையானது 2.5 கி.மீ சுற்றளவினை கொண்டுள்ளது. பாதுகாப்பு அரணானது பரப்பளவில் 5.66 ஏக்கரிலும், ஒட்டுமொத்த கோட்டையானது 17.75.66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று நுழைவு வாயிலினை (கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு) கொண்டதாக இக்கோட்டை உள்ளது. கோட்டையின் வடக்கு நுழைவு வாயிலானது செங்கற்களினால் கட்டப்பட்டதாகும். கோட்டையின் வெளிப்புறத்தில் கிடைக்கும் செங்;கற்கள் மூன்று அளவுகளில் (44x22x11 செ.மீ. 42x21x10 செ.மீ. மற்றும் 36x18x40 செ.மீ.) காணப்படுகிறது. மேற்பரப்பானது செம்புரான் கற்களை கொண்டு அமைக்கப்பட்டதாகும்.

இக்கோட்டை 15x36 மீ. அளவுடன் 32 கோட்டை கொத்தளங்கள் மற்றும் அதன் எச்சங்களை காணும் போது இக்கோட்டை மாளிகையுடன் இருந்திருக்க வேண்டும் எனத்தெரிகிறது. கோட்டையின் நான்கு புறங்களிலும் முனீஸ்வரன் மற்றும் கருப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. கோட்டையின் உள்புறத்தில் நீராழி குளம் அமைந்துள்ளது. அதன் அருகில் வாழ்விடப்பகுதியானது கண்டறியப்பட்டது. இங்கிருந்து கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கருப்பு பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.

பானை ஓடுகள் சிலவற்றில் கீறல்கள் மற்றும் தமிழ் பிராமி பொறிப்புகள் கிடைக்கின்றன. இதனைத்தவிர கண்ணாடியி னால் செய்யப்பட்ட மணிகள், வளையல்கள், பவள கற்கள், சுடு மண் பொருட்கள், இரும்பு உருக்கியதற்கான சான்றுகள் கிடைக்க பெற்றன. இரும்பினை உருக்கிய எச்சங்களானது கோட்டையின் தெற்கு பகுதியில் கண்டறியப்பட்டன. இரும்பு துண்டுகள், சுடுமண் குழாய்கள் கழிவுகள் கிடைத்துள்ளன.

இந்த இடம் தற்போது கரிமேடு என்று அழைக்கப்படுகிறது. மேலும், செம்புறாங்கல் பாறையிலேயே வட்டம், நீள்வட்டம் வடிவிலான குழிகள், கருப்பு, கருப்பு சிவப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. மேற்கண்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பொற்பனைக்கோட்டை அகழாய்வு மேலும் பல தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை வெளிகொணர்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப் படுகின்றது. அதனடிப்படையில், பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணிகள்  இன்று  தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி , வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் .வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் இரா.சிவானந்தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் க.ராஜன், பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை, வட்டாட்சியர் விஸ்வநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Tags:    

Similar News