ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை
வேளாங்கண்ணியில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பேராலய பங்குத்தந்தை தொடங்கி வைத்தார்.;
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட 24 மணி நேரம் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது.
உதவிக்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் வேளாங்கண்ணி பேராலய முகப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து ஆம்புலன்ஸ்க்கான சாவியை பேராலய பங்குத்தந்தை உதவிக்கரங்கள் அமைப்பிடம் வழங்கினார்.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை வேளாங்கண்ணியில் 24 மணி நேரமும் ஆக்சிசன் சிலிண்டருடன் இலவசமாக செயல்படும் என உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.