போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு
குமரியில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 2681 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தலைக்கவசம் இன்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் அதிகரிப்பது தொடர்கதையாகி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால், சரியான முறையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும்,பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
வாகன விபத்தை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 34 இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வருதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2681 வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2 மாதங்களில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் போலீசார் வாகனச்சோதனை மேற்கொண்டாலும், மறுபுறம் தொடர்ந்து வாகன ஓட்டிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.