வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

குமரியில், வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-22 00:15 GMT

பணம் பறித்த வழக்கில் கைதானவர்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவிஸ் (வயது 38), தனியார் வங்கியில் தணிக்கை மேலாளர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. பிரவிஸ்,  கடந்த 9 ஆம் தேதி தக்கலை அருகே உள்ள ஆழ்வார்கோவில் சந்திப்பு பகுதியில் 10 லட்சம் ரூபாயுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பிரவிஸ் நண்பரான மணலிக்கரை பகுதியை சேர்ந்த பிராங்ளின் ஜோஸ் (38) மற்றும் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (63), மாகீன் (58) ஆகியோர் வந்தனர். பிரவிஸ் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை, திடீரென அவர்கள் பறித்தனர். நண்பரின் இந்த செயலால் பதற்றமடைந்த அவர் சத்தம் போட்டார், ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரவிஸ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன், சப் இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் தனிப்படையினர், வள்ளியூர் அருகே செங்கல் சூளையில் வைத்து 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், பிரவிஸ் கையில் எப்போதும் லட்சக்கணக்கிலான பணம் வைத்திருப்பதை நண்பர் பிராங்ளின் ஜோஸ் அறிந்துள்ளார்.அவரிடம் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆடம்பரமாக செலவு செய்ய பிராங்ளின் ஜோஸ் திட்டமிட்டு, கொள்ளை அடித்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 லட்சம் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News