பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் திடீர் அறிவிப்பு

சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வினை ஒத்தி வைப்பதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Update: 2024-06-23 13:53 GMT

பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு  கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய செயலாளர் சுப்பிரமணி.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 700 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்திலிருந்து வெளியேறி சித்தூர் பகுதியில் குடிபுக அனுமதி கோரி சித்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கும் நிகழ்வு  கள்ளக்குறிச்சி துயர நிகழ்வால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து அதற்கான நிலம் எடுப்பு அறிவிப்பை சமீப நாட்களாக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.


விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியான நாள் முதல் தற்போது வரை 700 நாட்களாக ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட அனைவரும் தொடர் போராட்டத்திலும் , இரவு நேரங்களில் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக நிலம் எடுப்பு அறிவிப்புகள் வருவதை தொடர்ந்து ஏகனாபுரம் பகுதி கிராம மக்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குடியேற முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்கும் நாளை அறிவிக்க உள்ளதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.

நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் இன்று போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஏகனாபுரம் கிராம பள்ளியில் ஓன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.

மேலும் , கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டினையும் போராட்டங்களையும் அறிவித்து வரும் நிலையில் , நாளை சித்தூர் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக போராட்டக் குழுவினர் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி கூறுகையில், பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக 700 நாட்களாக விவசாயத்தை காக்கும் வகையில் அனைத்து கிராம மக்களும் போராடி வருகிறோம். இந்நிலையில் தொடர்ச்சியாக நிலம் எடுப்புக்காக அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு திட்டமிட்டு நாளை சந்திப்பதாக நிகழ்வுகள் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில் அனைவரும் மீளா துயரிலுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடு மற்றும் போராட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் அரசுக்கு நாங்களும் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் சந்திக்கும் இந்த நிகழ்வினை தற்காலிகமாக சற்று தள்ளி வைப்பதாகவும், ஆனால் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும்  நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News