ஈரோடு ரயில் நிலையத்தில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் கைது
ஈரோட்டில் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயிலில் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்வதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் சந்தேகப்படும்படியாக இருந்த பெண் ஒருவரை நிறுத்தி, அவரது உடமைகளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண், ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டம் தலகோபபிந்தா பகுதியை சேர்ந்த பாபுலால் மனைவி மம்தா(27) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதேபோல், அதே ரயிலில் ஒடிசா மாநிலம் திகிடியை சேர்ந்த அகனாமாலிக்(54) என்பவர் தடை செய்யப்பட்ட 1,200கிராம் கஞ்சா பொட்டலத்தை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து, இருவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.