ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update: 2021-06-27 12:00 GMT

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

 காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.


கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 ஆயிரத்து 274 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.


இந்தநிலையில் நேற்று வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர் வருவதை  காவிரியின் நுழைவிடமான தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 94.80 அடியை எட்டி உள்ளது. இதேபோல் கபினி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 75.52 அடியை எட்டி உள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5978 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1296 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7ஆயிரத்து 274 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News