யுகாதி பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது.

Update: 2022-04-03 13:15 GMT

மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இச்சுற்றுலா தலத்தை காணவும், அங்குள்ள இயற்கை அழகை பரிசல் மூலம் கண்டு களிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.

இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதையடுத்தும், நேற்று யுகாதி பண்டிகை இன்று ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து இரு தினங்கள் விடுமுறையானதால் குடும்பத்தோடு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அங்கு எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ், காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று அங்குள்ள இயற்கை அழகையும், நீர் வீழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்ததோடு, ஒகேனக்கலில் பிரசித்தி பெற்ற மீன் வருவலையும் ருசித்து மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகரித்ததால் காவல் துறையினர் ஆலம்பாடி, மணல்திட்டு மெயின் அருவி, பரிசில் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News