ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து:
காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்று16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று 16 ஆயிரம் கன தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்து வருகிறது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் நீக்கியது. ஆனால் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக போலீசார் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்று வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஐந்தருவிகளை கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 6 மாதத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.