ஒகேனக்கல்லில் தடையை மீறி அருவிகளில் குளி்த்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறை நாளை கொண்டாட ஒகேனக்கல்லில் தடையை மீறி அருவிகளில் குளித்த சுற்றுலப பயணிகள், கண்டு கொள்ளாத காவல் துறையினர்.;
ஒகேனக்கல்லில் தடையை மீறி அருவிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசலில் சென்று அருவிகள் சுற்றிப் பார்த்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசலில் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் ஆயில் மசாஜ் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதித்திருந்த தடையை மீறி மெயினருவி, சினியருவி மற்றும் ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் குளித்தனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றாமல், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
மேலும் பரிசல் பயணம் செய்தால், அருவிகளை காண முடியும் என்பதால், பரிசல் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் பரிசல் துறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது. கொரோனா கட்டுப்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தனர்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிகளில் குளிப்பவர்களை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.