கத்தி மீது ஏறி பூசாரி அருள்வாக்கு; 108 கிலோ மிளகாய் கரைசல் அபிஷேகம்.. அதிரவைக்கும் வழிபாடு
கத்தி மீது ஏறி பூசாரி அருள்வாக்கு, 108 கிலோ மிளகாயில் அபிஷேகம் செய்துகொள்ளும் அதிரவைக்கும் வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று ஆடி அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதன் ஒரு பகுதியாக கருப்பு சாமிக்கு மிளகாய் அபிஷேகம், பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பு சாமிக்கு மதுபானங்களையும், சுருட்டு வகைகளை வைத்து படையலிட்டனர்.
இதனையடுத்து கோயில் பூசாரி கோவிந்தன் அருள் வந்து ஆடியபடி கத்தி மேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி கோவிந்தன் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தீய சக்திகள் விலகவும், குடும்ப பிரச்சனைகள் மற்றும் வியாபார பிரச்சனைகள் அகலவும், மிளகாய் யாகம் நடைபெற்றது. மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை கருப்பு சாமிக்கு பலியிட்டு வழிப்பட்டனர்.