அ.தி.மு.க ஆட்சியை விரட்ட வேண்டும்: தேர்தல் பரப்புரையில் உதயநிதி
புதிய கல்விக்கொள்கையை நீட்டும் அதிமுக கூட்டணி அரசை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என பென்னாகரத்தில் உதயநிதி கூறினார்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் பென்னாகரம் நகர் பகுதியில் உதயநிதி, திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான இன்பசேகரனுக்கு பரப்புரை மேற்கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இதனை சீர் குலைக்க புதிய கல்விக்கொள்கையை நீட்டும் அதிமுக கூட்டணி அரசை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என பேசினார்.
பென்னாகரத்தில் திமுக, பாமகவும் நேரடியாக மோதுகிறது. பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றார். இந்த முறை பாமகவும் தொகுதியை பிடித்து விட வேண்டும் என்று விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றனர். மறுபக்கம் உள்ள திமுகவும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.