அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்: மழைநீரை குடிக்கும் அவலநிலை
பெரும்பாலை அருகே அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்கும் அவலநிலை நிலவுகிறது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடியூர் மேல் காடு கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் மலைசூழ்ந்த பகுதியாகும். இந்நிலையில் அங்கு வாழும் மக்களுக்கு சாலை வசதி,மின்சார வசதி ,குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். தண்ணீர் வசதி இல்லாததால் குடிக்கவும் விவசாயம் செய்ய முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொம்பாடி ஊரிலிருந்து மேல்காடு செல்லும் ரோடு ஆனது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலோ கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் விஷக்கிருமிகள் கடித்தாலோ ஆஸ்பத்திரிக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை. உடல்நிலை சரியில்லாதவர்களை துணியால் தொட்டில் கட்டி தூக்கி செல்கின்றனர்.
இதனால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அங்கு வராததால் அந்த மலைக்கிராம மக்கள் மழை பெய்யும் போது மழைநீரை தொட்டிக்குள் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும் குடிநீர் தேவை என்றால் சுமார் 2கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மத்திய அரசோ மாநில அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமோ முன்வந்து இந்த மலை கிராம மக்களின் நலனை கருதி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கை விளங்குகின்றது.தற்போது நாகரிகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அடிப்படை வசதிகாக ஏங்கும் மக்களும் இன்னும் இருந்துதான் வருகின்றனர்.