தர்மபுரியில் 100க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைவு
தர்மபுரியில் 100க்கும் மேற்பட்டோர் எஸ்எப்ஐ சங்கத்திலிருந்து விலகி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்தனர்.
தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.
பின்னர் அனைவரையும் வரவேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசும் போது, நீங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்ததை வரவேற்கிறேன்.நீங்கள் அனைவரும் இந்த மாவட்டத்தில் பிரச்சனைகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட வேண்டும். மாவட்ட கட்சி மற்றும் தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தமிழமுதன் மனு வழங்கினார். அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடந்திருப்பதால் பட்டியலின மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்கள் பாதிக்காமல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் கமலாமூர்த்தி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் கே.மணி ஆகியோர் உடனிருந்தனர்.