அர்ச்சகர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்க வேண்டும் - இயக்குனர் கெளதமன் பேட்டி
தமிழக கோயில்களில் அர்ச்சகர்களுக்கு பணி ஓய்வு வயது 60 ஆக தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - இயக்குனர் கெளதமன் பேட்டி.
பென்னாகரம் அருகே ஊத்துக்குளி மலை மாதேஸ்வரன் திருக்கோயிலில் தமிழ் ஆகமா பூசாரி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட டைரக்டர் கௌதமன் பங்கேற்று சிறப்பித்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பெரிய தோட்டம் புதூர் அருகே உள்ள ஊத்துக்குளி மலை மாதேஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை, சத்யபமா அறக்கட்டளை சார்பாக தமிழ் பூசாரி பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குனரும் தமிழ் பற்றாளர், தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான கௌதமன் கலந்துகொண்டு, மூன்று நாள் பயிற்சி முடித்த ஆண் பெண் இரு பாலருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியபோது: நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழ் ஆகம முறைப்படி திருக்கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தமிழக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருவது பாராட்டக்கூடிய விஷயம் ஆகும்.
குறிப்பாக தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் பார்ப்பனர்கள் மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் எங்களின் பெரிய போராட்டத்திற்கு பிறகு தமிழில் பூஜை செய்யப்பட்டு தமிழ் அங்கு ஒலிக்கப்பட்டது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி ஆகும். சிதம்பரம் நடராஜர் திருகோவில் சட்ட ரீதியாக போராடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சென்ற ஆட்சியை விட இந்த ஆட்சி தமிழகத்தில் நல்ல நம்பிக்கை பெற்றுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பணி ஓய்வு வயது 60 ஆக நியமிக்கப்பட்டுள்ளது. அதைப் போல ஏற்கனவே கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு பணி ஓய்வு வயது 60 ஆக தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனத்தினர், மலை மாதேஸ்வரன் திருக்கோவில் தர்மகத்தா ஜெயபிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.