ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.;

Update: 2021-10-08 04:30 GMT

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வருகிறது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க, 6 மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை,  கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் நீக்கியது. ஆனால் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக போலீசார் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஐந்தருவிகளை கண்டு மகிழ்கின்றனர். முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை, பொதுமக்கள் சுற்றி பார்த்த வண்ணம் உள்ளனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News