5 நாட்களாக வெள்ளக்காடாய் மாறிய ஒகேனக்கல்: நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியிலிருந்து 60,000 கன அடியாக குறைந்தது.;
வெள்ளக்காடாய் மாறிய ஒகேனக்கல்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் வட கிழக்கு பருவமழையால் தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70,000 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து வருவதால் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 60,000 கனஅடியாக உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த 5 நாட்களாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகளை மூழ்கடித்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றங்கரையோரம் வருவாய் பேரிடர், ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நீர்வரத்து அதிகரித்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.