ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் - 6000 கன அடி தண்ணீர் வரத்து
கர்நாடக அணைகளில் இருந்து, முதற்கட்டமாக திறக்கப்பட்ட 6000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைந்தது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்ததால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது.
கடந்த சில தினங்களாக, மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், நீர்வரத்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு, நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து, முதற்கட்டமாக இரண்டு அணைகளிலும் சேர்த்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று வரை காவிரி ஆற்றில், தமிழக எல்லையான பிரிவுகளுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்து வந்தது. நேற்று காலை, கபினியில் இருந்து 18 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி என, மொத்தம் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக திறக்கப்பட்ட 6000 கன அடி தண்ணீர், இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அதிகரித்து, வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இதன் காரணமாக, காவிரி ஆற்றில் ஐந்தருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று திறக்கப்பட்ட 20000 கனஅடி தண்ணீரும் விரைவில் வந்தடையும் என்பதால், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.