தமிழகத்தில் முதன் முறையாக 10,000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் கிராம பஞ்சாயத்து
தமிழகத்திலேயே முதன் முறையாக 10ஆயிரம் பழமரக்கன்றுகளை நட்டு கிராம பஞ்சாயத்து பராமரித்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி யூனியன் எர்ரபையனஹள்ளி பஞ்சாயத்து 10 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்வை சுதந்திர தினத்தில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து இக்கிராமத்தில் கிராம ஊராட்சிக்குட்பட்ட 42 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் 8000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்று தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கிவைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மூன்று மாதங்களில் இக்கிராமத்தில். தென்னை, மா, பலா, கொய்யா சப்போட்டா உள்ளிட்ட 15 வகையான பழவகை மரக்கன்றுகளை நட்டுள்ளனா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 29 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிவடைந்துள்ளது.
கன்றுகளை நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகளில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மூலம் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகள் மரங்களாக வளரும் போது அதில் இருந்து கிடைக்கும் கனிகள் மூலம் கிராம ஊராட்சிக்கு நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் தமிழகத்தில் முதன் முறையாக முயற்சி மேற்கொண்டுள்ளதாக பஞ்சாயத்து தலைவா் சிலம்பரசன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி யூனியன் சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, மற்றும் பாமக நிர்வாகிகள் முருகசாமி, சாந்தமூர்த்தி, பெரியசாமி,பாலகிருஷ்ணன், மணி, சக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.